Friday, 20 March 2015

பழையாறை 1

கும்பகோணத்தில் இருக்கும் கோவில்களை பார்க்க இந்த பயணம். மிக முக்கியமாக பழையாறையை பார்க்கவேண்டும். கும்பகோணத்தில் இருந்து பட்டிஸ்வரம் சென்று அங்கிருந்து பழையாறையை அடையலாம் என்று சிலர் வழி சொன்னார்கள். அப்படியே பயணப்பட்டோம். வழியில் பட்டிஸ்வரம், திருசக்திமுற்றம் கோவிலையும் பார்த்துவிட்டு பழையாறைக்கு சென்றோம். ஒரு சிறிய வீதி வழியே செல்லும் போது, பெரிய கோபுரங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.எனக்கு தெரிந்த “பழையாறை” சரித்திர புதினங்களில் வரும் ஊர் மட்டுமே! அங்கு மாளிகைகள் இருந்தது, கோவில் ஊரின் நடுவில் இருந்ததாம். படித்திருந்த எல்லா செய்திகளும், என் கண் முன்னே, தஞ்சைக்கு முன்னே வளர்ந்திருந்த ஒரு நகரை என் கண் முன்னே கற்பனையில் ஓட விட்டிருந்தது. அந்த வீதியின் முடிவிற்கு வந்துவிட்டோம். கோவிலை பார்க்க முடியவில்லை. கீழப்பழையாறை தானே இன்று விசாரித்து முடித்துவிட்டேன். கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்டபோது, நாங்கள் வந்த வழியே காண்பித்தார்கள். கடந்து வந்துவிட்டோமா ? பெரிய கோபுரங்கள் ஏதும் தென்படவில்லையே , வாகனங்கள் எதுமே காணக்கிடைக்கவில்லை!, மறுபடியும் அந்த சாலையில் பயணித்தோம். வழியில் ஒரு சிதைந்த கோபுரத்தை காண்பித்த எங்கள் வாகன ஓட்டுனர், இதுவா? என்றார். எத்துணை பெரிய நகரம் பழையாறை? எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க ஊர், அதன் பழைய கோவில் இப்படியா இருக்கும்? நிச்சயம் இது இல்லை என்று சொல்லிவிட்டேன். கடந்து சென்ற ஒரு முதியவரிடம், கோவிலை விசாரிக்கையில், அதுதான் என்றார். 


அதிர்ச்சியின் உச்சியில் இருக்கிறேன், மிக அதிகமாய் சிதைந்த கோபுரம், கூட்டம் இல்லை , குறைந்த பட்சம், பூசை செய்பவர் கூட இல்லை, காலை பத்து மணி அளவில், கோவில் பூட்டப்பட்டிருந்தது. கோவில்களில் கூட்டம் வழியும், குடந்தையில் இப்படி ஒரு கோவிலா? சோமநாதர் திருக்கோவில், கீழப்பழையாறை, என்று பெயர் பலகை இருந்தது. கோவிலை திறக்க யாராவது இருகிறார்களா, என்று கண்கள் தேட, ஒரு பெரியவர் வந்து கதவுகளை திறந்தார். எங்க இருந்து வரிங்க?, என்ற கேள்வியோடு அப்பாவிடம் பேசினார். யாரும் அங்கு பெரிதாய் வருவதில்லை. பக்கத்தில் இருக்கும் பட்டிஸ்வரம் துர்க்கை கோவிலுக்கு வரும் கூட்டம் இங்கு இல்லை. உடைந்திருந்த ராஜ கோபுரத்தின் வழியே, அந்த கோவிலை நோக்கி நடக்கிறேன் நான். சிறிதாய் ஒரு நந்தி மண்டபம், ஒரு மூடிய சன்னதி சோமகமலாம்பிகை , தரைகளில் பதிக்க கற்கள் ஒரு பக்கம் கொட்டி கிடந்தது. 

தரை முழுக்க சிதைக்கப்பட்டிருந்தது. சீர் அமைக்க இருகிறார்கள் என்றார் கதவை திறந்து விட்டவர். கண் முன்னே இன்னும் ஒரு கோபுரம், இரண்டு கோபுரங்களுக்கு நடுவே, கோவில் சிதைந்து காணப்பட்டது. காலம் மிகப்பெரிய போர்க்களம் போலும், இங்கு உயந்தது தாழ்கிறது, அல்லது தாழ்த்தப்படுகிறது. மக்கள் குவிந்து கிடந்த மண்ணில், இப்போது மக்கள் இல்லை, பொட்டல் காடுகளாய் இருந்த நிலங்களில் மக்கள் வழிகிறார்கள். மாற்றம் இயற்கையின் எழுதப்படாத விதி போலும்.



ராஜ கோபுரம் கற்களால் கட்டப்பட்டிருந்தாலும், மேலே இருந்த பகுதிகள் செங்கற்களால் ஆனவை. கால வெள்ளத்தில், அதன் மேற் சுவரையும், சிலைகளும் இழந்து பாதி உடைந்தும் காணப்பட்டது.கட்டிடங்களை காணும் போது , படித்தவை எல்லாம் நினைவிற்கு வருவது வழக்கமாகி விட்டது. செங்கற்கள், இன்றைக்கும் நாம் பயன்படுத்தும் கட்டுமான பொருள். ஆனால், பெரும்பாலும் ஒரே அளவான செங்கற்கள் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. நமக்கு தேவை என்றால், தனியாக செய்து கொள்ளவும் முடியும். ஆனால் அவையும் ஒரு குறிப்பிட்ட மாதரிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும் போது மட்டுமே சாத்தியம். ஆனால், கோபுரத்தில் நான் பார்க்கும் செங்கற்கள், ஒவ்வொன்றும் ஒரு அளவு, அந்த உருவத்திற்கு ஏற்ப. அதில் எந்த ஒரு கல்லை மாற்றி வைத்தாலும் அந்த உருவம் பெற முடியாது. இன்றைக்கு இருப்பது போன்று எந்திரங்கள் இருந்திருக்காது, ஆனாலும் இது எப்படி சாத்தியம்? செங்கற்கள் செய்முறை பற்றி படித்திருக்கிறேன். மண்ணை தேர்ந்தெடுத்து, தேவையானவற்றை எடுத்து, சுத்தப்படுத்தி, கற்கள் நீக்கி , குழைத்து, அதன் அளவீடுகளில் செய்யப்பட சட்டங்களுக்குள் நிரப்பி, காயவைத்து, பிறகு சுட்டு தயார்செய்வார்கள். இங்கு காய விடும் போதும், சுடும் போதும் செங்கல் சுருங்கும். அதனால் அதன் இறுதி அளவை கணக்கில் கொண்டு, அது சுருங்கும் அளவையும் கணக்கில் கொண்டு, சட்டங்கள் செய்திருக்க வேண்டும். இங்கு ஒவ்வொன்றும் வேறு வேறு அளவு. ஒரு வேறுபட்ட சுவர் கட்டவே இன்றைய நிலையில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று படங்கள் தேவைப்படுகின்றது. அதுவும் அடிமட்ட ஊழியருக்கு தெரிவிக்கப்பட , படங்களை புரிந்துக்கொள்ளும் அறிவும், அதை எளிமைப்படுத்தி புரிய வைக்கும் அறிவும் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். இங்கு என் கண் முன்னே இருக்கும் இதை செய்ய, அடிப்படையாக அளவுகள் தேவை, அனுபவம் மிகுந்த கட்டிடகலை வல்லுனர்கள், பாறைகளின், செங்கற்களின் தன்மை தெரிந்த வல்லுனர்கள், படம் வரைய தெரிந்தவர்கள், அதை அடுத்த நிலை உதவியாளருக்கு தெரிவிப்பவர், சிற்பிகளுக்கு தலைமை, செங்கற்கள் செய்யும் குழு, அவர்களுக்கு தலைமை, இதன் கட்டுமானத்தை செய்யும் குழு. இவர்கள் அத்துணை பேரின் கூட்டு முயற்சியே இன்று நான் காணும் இந்த கோபுரம். இவர்களில் பலருக்கு படங்களை படிக்க தெரிந்திருக்க வேண்டும். படங்களை படிப்பது, மிக சுத்தமாக கட்டிடகலையியல் வார்த்தை. ஒரு கட்டுமானத்தை கோடுகளின் துணை கொண்டு, முழுக்க சொல்லி விடும் கலை. வரைபவருக்கும், புரிந்துக்கொள்பவருக்கும் இடைப்பட்ட மொழி இங்கு ஓவியமே. அளவீடுகள், பெயர்கள் சரியாக இருந்தால் வரைந்தவரின் உதவி கூட இல்லாமல், புரிந்துக் கொள்ள முடியும்.
இந்த செங்கற்கள் பல நூறு மக்களின் உழைப்பு. அப்படியே அடுத்த நிலை கோபுரத்தை கடந்து உள்ளே செல்கிறேன். சோமநாதர் சன்னிதி. என்னை தவிர, இந்த காலத்தை கடந்த கலைக்கோவிலை பார்க்க யாருமே இல்லை இங்கு. மாடக்கோவில் அமைப்பு, தேர் அமைப்பு, ஒரு பக்கம் குதிரையும், இன்னொரு பக்கம் யானையும் இக்கோவிலை வேறு இடம் இழுத்துச் செல்ல தயாராய் இருக்கிறது போலும். தாராசுரத்தை நினைவுப்படுத்துகிறது இதன் அமைப்பு.இதன் அழகில் மயங்கி, இதைப் போல தானும் ஒரு கோவில் கட்டும் எண்ணம் கொண்டு இரண்டாம் ராஜ ராஜன் தாராசுரத்தில் அக்கோவிலை எழுப்பியிருக்கலாம். செடிகள் எல்லாம் சுவர்களை ஆக்கிரமித்திருக்கின்றது. பராமரிப்பு என்ற பெயரில் தரைகளில் எல்லாம் பூங்காகளில் காணப்படும் (டைல்ஸ்) கற்கள், சக்கரம் பாதி மறைக்கப்பட்டு தரை மேடாக உயர்த்தி இருகிறார்கள். திருப்புள்ளமங்கை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களில் காண கிடக்கும் சிவந்த வண்ணம் சில இடங்களில் பார்க்க முடிகிறது.

சன்னிதி பூட்டி இருந்தது. வெளிலே சுற்றி பார்த்துவிட்டு கிளம்ப எண்ணம் இல்லை, ஆனாலும் வேறு வழி இல்லை. விமானத்தின் காரை உடைந்து இருக்கிறது, மேலே ஒரு செடி மரமாக வளர துடிக்கிறது. சுற்று சுவரின் ஓரங்களில் மணல், பள்ளங்கள் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. ஆனால், இதுதான் நிஜம். உண்மை. 

எது இன்று மேலான இடத்தில் உள்ளதோ, அது ஒருநாள் கீழேயும் வருகிறது. காலம் அதை தீர்மானிக்கிறது. படிக்கற்களுக்கு கிழே இருக்கும் பகுதியில் அழகாய் சிறிதாய் நிறைய சிலைகள். அடுக்கடுக்காய் நிலைகள், அத்தனையிலும் வேலைப்பாடுகள். வரலாறு என்ன சொல்கிறது பழையாறை பற்றி... இதன் சிற்பங்களில் என்ன கதை சொல்கிறது ...

Thursday, 19 March 2015

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே (தநக்கே) உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை (வெங்கை) நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு

நிறைய எழுதியிருக்கிறார்கள்,இவ்வூர் பற்றி.புகழுக்கு குறையில்லை, அழகிற்கு குறையில்லை,ஆர்வம் நிறைந்த நெஞ்சங்களுக்கும் குறையில்லை.இந்த கோவில் முன் நின்று அதன் அழகில் மனம் லயித்து அதன் அழகில் கண்கள்  பதித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் உயிர்களில் நானும் ஒருத்தி.


எத்தனை முறை இங்கு நின்றாலும் இது என்னை ஈர்க்கிறது.சென்ற முறை நீ பார்க்கவில்லை என்று சொல்லி இன்னும் ஆயிரம் புதிய அதிசயங்களை பரவவிடுகிறது கண்கள்முன்னே! தொட்டு தொட்டு பார்த்தாலும் எப்போதும் புதிதாய் ஒரு உணர்வு.

இது பல நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கிறது.புகழின் உச்சியிலும்,கால ஓட்டத்தின் மாற்றத்தில் பல கட்டங்கள் தாண்டி,கோடானுகோடி மனிதர்களை பார்த்திருக்கிறது. இந்த மண்ணில் நின்று இராஜராஜ சோழர் இக்கோவிலை ரசித்திருக்கிறார்,அவர் கனவுகளில் உருவாக்கிய அந்த கற்றளியை மண்ணில் எழுப்பி மகிழ்ந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகட்கு பிறகும் இவ்வதிசயத்தை பாரக்க பலர் வருவார்கள் என்று தெரிந்தோ என்னவோ இந்த பிரமாண்டத்தை உருவாக்கியிருக்கிறார்.


இக்கோவிலின் வரலாற்றில் தடம் பதித்திருக்கும் சாம்ராஜியங்கள்

அகழி . கோட்டை மதில்கள் , கொத்தளங்கள் - நாயக்க மன்னர்கள் கட்டியவை .

கேரளாந்தகன் திருவாயில் - ராஜா ராஜசோழன் - ஐந்து நிலைகள் 
பலிப்பீடமும் , ரிஷபக்கொடியும் -கேரளாந்தகன் திருவாயில் , ராஜா ராஜன் திருவாயில்களுக்கு நடுவே இருந்திருக்க வேண்டும் . இப்போது இங்கு நடை பதை மட்டுமே உள்ளது . 
ஸ்ரீ ராஜா ராஜன் திருவாயில் - முன்று தளம் - 
அணுக்கன் திருவாயில் - கோபுர அமைப்பு இல்லை- மரத்தால் செய்யப்பட்ட நிலைக் கால்கள் .
அர்த்தமண்டப திருவயில்கள் 
அம்மன் கோவில் - பாண்டிய மன்னன் - பெயர் குறிப்பிடபட வில்லை 
பிரமிச்சி நாயகர் மண்டபம் - மகாமண்டபம் , முக மண்டபம் இரண்டையும் பிரமிச்சி நாயகர் மண்டபம் என்ற பெயரால் ,பச்சையா நாயகர் என்பவர் கட்டி இருக்கிறார் .
மல்லப்ப நாயகர் மண்டபம் - மூர்த்தி அம்மன் மண்டபம் - மல்லப்ப நாயகர் 
சுப்ரமணிய திருக்கோவில் - விஜய நகர பேரரசு 
பெரிய காளையும் , இடப மண்டபமும் - நாயக்க மன்னர்கள் 
விநாயகர் கோவில் - சரபோஜி மன்னன் 

ஓவியங்கள் 
சோழர் ஓவியங்கள் - கருவறை சுற்றி ந்தர அரை என்னும் சுற்று கூடம். பிர்க்கலத்தில் இவற்றின் மீதே விஜய ராகவ நாயக்கர் , நாயகர் ஓவியங்களை வரைகிறார் .
மராத்தியர் ஓவியம் - சரபோஜி காலத்தவை - அம்மன் கோவில் , மல்லப்ப நாயகர் மண்டபம் , திருச்சுற்று மாளிகை ,இடப மண்டபம் 



கல்வெட்டுகள் - தஞ்சை பெருவுடையார் கோவில் 

இங்குள்ள கல்வெட்டுகளில் தொடக்ககக் கல்வெட்டாகத் திகழ்வது கருவறையின் வடபுற அதிஷ்டானத்துத் பட்டிகையில் உள்ளதாகும் .மாமன்னனைப் புகழும் வடமொழிச் சுலோகம் சாற்றி மெயக்கிர்த்திப் பாடி , ஸ்ரீ ராஜா ராஜா தேவரின் இருபது ஆறாம் ஆட்சியாண்டில் இருபதாம் நாளில் தஞ்சாவூர் இருமடிச் சோழன் எனும் அரண்மனையின் கிழக்குப் பகுதியிலுள்ள திருமஞ்சன சாலையான தனது அபிஷேக மண்டபத்தில் இருக்கும் போது , பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் இல் தான் கட்டுவித்த கற்கோவிலானது ராஜராஜேச்சரம் கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு , தான் , தன உடன் பிறந்த குந்தவை , தனது தேவியர் ஆகிய இவர்கள் அறக் கொடையாகக் கொடுதவற்றோடு , மற்றும் யார் யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அனைத்தையும் ஒன்றாக பட்டியலிட்டுக் கல்லில் வெட்டுமாறு ஆணை இட்டதை விவரிக்கின்றது.
தஞ்சை பெரிய கோவில் என்றால் நம் நினைவிற்கு வரவேண்டியவர்கள் :
. ராஜா ராஜா சோழன் 
. ........,வீர சோழ குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் 
. மதுராந்தகன் நித்தவினோத பெருந்தச்சன் 
. இலத்தி சடையன் கண்டராதித்த பெருந்தச்சன் 
. மாமன்னனின் தமக்கை குந்தவை பிராட்டியார் 
. சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடி சோழ பிரம்மராயன் 
. தென்னவன் முவேந்த வேளான்
. ராஜேந்திர சோழன் 
௧௦.ராஜா குரு சர்வ சிவ பண்டிதர் 
௧௧. சைவ ஆச்சாரிய பவனபிடாரன் 
௧௨.எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடயான்

உண்மையற்ற புனைந்துரைகள் :
நிழல் சாயாத கோபுரம் 
வளர்கிற நந்தி 
என்பது டன் எடையுள்ள ஒரே பிரமரந்திர கல் .

ஆதாரம் : ராஜராஜேச்சரம் , குடவாயில் பாலசுப்ரமணியம்



நான் அந்த பிரம்மாண்டமான விமானத்தை தாங்கி நிற்க்கும் கருவறை நோக்கி நடக்கிறேன்.என்னைத் தாண்டி பல நூறு பேர் போகிறார்கள்.
பலர்  இதன்  அழகில் மயக்கம் கொண்டு  மீண்டும் மீண்டும் வருவோரில் நானும் ஒருத்தி. கேரளந்தகன் திருவாயில் கடந்திருக்கிறேன்.நடுவே ஒரு கோபுரத்தின் வழியே,அந்த பிரமாண்ட விமானத்தை கண்களில் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்.மீண்டும்  ஒரு வாயில்,இராஜ ராஜன் நுழைவாயில் வழியே நடக்கிறேன்.மிகப் பெரிய நில பரப்பில், ஒரு கற்கலை மலையின் முன் நிற்க்கிறேன். பெரிய மேடை மீது கோவில், நந்தி மண்டபம் பார்க்கிறேன்.நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் நீல வண்ணக்குழம்பில் ஓவியங்கள் இருக்கின்றன. நந்தி மண்டபத்திற்க்கும், கோவில் படிக்கட்டுக்கும் இடையில் நின்று எப்போதும் என்னை பிரம்மிக்கச்செய்யும் இதனோடு இணைய முற்படுகிறேன்.

பல முறை இங்கு நின்றிருக்கிறேன், உடையார் படித்து முடித்ததும் பெருவுடையாரை தரிசிக்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்போதும் வந்தேன். நிச்சயம் எத்துனையாவது முறையாக இங்கு நிற்கிறேன் என்பது நினைவில் இல்லை. நான் இங்கு நிற்கிறேன் என்பதே மனதில் மகிழ்ச்சி தருகிறது. இந்த இடம், கற்பனைகளை கட்டறுத்து விட்டு, முடிந்தால் இதன் கட்டுமானத்தை அறிந்துக்கொள்ளுங்கள் என்று ராஜ ராஜ சோழர் சவால் விடுவதைப் போலத் தோன்றும். ஆயிரம் விசயங்கள் கல்வெட்டுகளில் பதிவு செய்து , அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வாழ்வை சொல்லிச் சென்ற ஒரு மன்னன், இதன் கட்டுமான வித்தையைச் சொல்லாதது ஏன்? மலைத்துப் போய் பார்க்கும் கண்களில் என்னுடையதும் ஒன்று ! சிலருடைய ஆசையை போல , எனக்கும் உண்டு , அழகான அந்த சோழ தேசத்தில் , இந்த கட்டிடம் வளர்ந்த நேரத்தில் , நாமும் இங்கு இருந்திருப்போமா ? தூரத்தில் நின்று , இதன் அழகை ரசித்துக் கொண்டிருந்த உடையாரை பார்த்து பிரமித்துப் போயிருந்திருப்பேனா என்பதுப் போன்ற எண்ணங்கள் அதிகம். 

பலர் என்னைக் கடந்து போகும் போது , உச்சரிக்கும் வார்த்தைகளில் இது மட்டும் என்னை பாதிக்கிறது. இது சோழர்கள் , கோவிலாய் கட்டவில்லை, அவர்களின் சக்தியை , பேரரசைக் காட்ட கட்டினார்கள். யாரோடும் சண்டையிட தோன்றவில்லை, நிச்சயம் எல்லோரும் ஒரே மனநிலையில் எல்லா விசயங்களையும் அணுக முடியாது. தட்சிணமேரு இது தான் என் மனதில் நிற்கும் சொல் , பெரிய கோவிலை பற்றி எண்ணும் போது. படிகளின் வழியே கோவிலை நோக்கி நடக்கிறேன். அங்கு அமர்ந்து பிரமாண்டமான நந்தி, நந்தி மண்டபம் , கோபுரங்கள் , இடப்பக்கமும் வலப்பக்கமும் தெரியும் திருசுற்று மாளிகை பார்கிறேன். ஒரு கட்டிடகலையியல் மாணவியாக என்னை இந்த கட்டிடம் மிக அதிகமாய் ஈர்த்திருக்கிறது. சிறியதாய் ஒரு வீடு காட்ட , எத்துணை படங்கள், எத்துணை நிலை ஊழியர்கள் , எத்துணை கலந்துரையாடல்கள் , எவ்வளவு மக்களின் பங்களிப்பு இதை எல்லாம் கடந்தாலும், நாம் கட்டுவிப்பது என்னவோ, நூறு ஆண்டுகளுக்கு மேல் தாங்காத ஒரு கட்டிடம் தான். ஆனால் ஆயிரம் ஆண்டுகட்கு பின்பும்,வியப்போடும் ஆச்சர்யத்தோடும் பிரம்மிப்போடும் நம்மைக் காண செய்ய, எவ்வளவு மனிதர்கள் இதற்கு பின்னால் இருந்திருப்பார்கள்.


“உடையார்” நிச்சயம் அந்த எண்ணங்களை ஏற்படுத்தியது. வடிவமைக்க ஒருவன், அவனுக்குச் சில உதவியாளர்கள், அவர்களுக்கு கீழ் சிற்பிகள், அவர்களின் உதவியாளர்கள், கற்களைக் கொண்டுவர வண்டி, எடுக்கும் இடத்திலும், சேர்க்கும் இடத்திலும் கணக்கர்கள் , அவர்களின் பதிவேடு, கற்களைத் தேர்ந்தெடுக்க சிற்பிகள், அதைத் தூக்க மக்கள், வண்டியோடு செல்ல மக்கள், சேர்க்கும் இடத்தில் மக்கள் , சிலைகள் வடிக்க, அதற்கான மாதரி படங்கள் வரைந்து கொள்ள நடன மங்கைகள், சிற்பிகளுக்கு உதவ மக்கள், இரவில் நாட்டியம் ஆட பெண்கள், இசைக்கருவிகள் இசைக்க மக்கள், மக்கள், மக்கள். எங்கு நோக்கினும் மக்கள் என்று நிறைந்து வழிந்திருக்கும் தஞ்சை. அவ்வளவு பேருக்கும் உணவு , இருக்க இடம் , உடை! சண்டைகள் வந்திருக்கலாம் , திருமணங்கள் நடந்திருக்கலாம், இதற்கெல்லாம் யார் பொறுப்பு வகித்திருப்பார்கள்? ஒரு கற்றளி எழுப்ப வேண்டும் என்ற மன்னின் ஆசைக்கு பின்னே, எவ்வளவு செயல்பாடுகள்? மக்கள் ஒன்று திரளாமல் இது சாத்தியமே இல்லை. இங்கு எல்லோர் பெயரும் பதியப்பட்டது என்றால், அதன் பின்னே அவ்வளவு மக்கள் இருந்திருக்கிறார்கள்.  எண்ணங்கள் பின்னோக்கி செல்ல, இன்றைய நாளில் நம் இக்கோவிலை எப்படி வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. எத்துணை பெரிய கோவில், எவ்வளவு மக்களை பார்த்திருக்கிறது , பார்க்கப்போகிறது , அதன் கால ஓட்டத்தில் கரைந்து போகக் கூடிய கணக்கில் நானும் ஒருத்தி.

பெருவுடையாரை தரிசிக்க வேண்டும். மிகப் பெரிய சிவ லிங்கம். உலகில் எல்லாம் நாம்தான் என்னும் மனதை சற்று நிறுத்தி, இதை விடவா என்றுக் கேட்பதுப் போல. அதை விட பெரியது விமானம்  , வானையே கூரையாய், விமானமே ஈசனாய் நின்றிருக்கும் இங்கு , எதைப் பெரியது என்பது? படிகளைத் தாண்டி, வாசல் தொடும் நொடி முதல், ஆரம்பம் ஆகிறது, எனக்கான தரிசனம். பெருவுடையார், எத்துணை சாந்தமாய், கரங்களை நீட்டி அழைக்கிறார். கண்ணோடு கண்ணீர் மட்டுமே பேச, கேட்க என்ன இருக்கிறது இதை விட பெரிதாய் என்பது போல், தரிசனமே பெரிய மகிழ்ச்சி ஆகிறது இங்கு. பல ஆண்டுகளாய் பார்த்துப் பழகிய நட்பைப்போல, தரிசனம் முடித்து திரும்புகையில் கொஞ்சம் வருத்தம் இருக்கவே செய்கிறது. மீண்டும் உன்னைப் பார்க்க சீக்கிரம் அழைப்பு கொடு என்று மட்டுமே கேட்க தோன்றும் மனது. அப்படியே நடந்து திருசுற்று மாளிகையை அடைந்து அமர்ந்து கொண்டு மீண்டும் எண்ணங்களில் மூழ்கிப் போக ஆசைக்கொள்கிறேன். இந்த ஊரில் அரண்மனை இருந்திருக்கும், மக்கள் குடியிருப்புகள், சந்தை, பயிற்சி கூடங்கள், பள்ளிகூடங்கள், கோவில்கள், விளையாட்டுத்திடல், எல்லாம் இருந்திருக்கும். இன்று ஒன்றுமே இல்லை, ராஜ ராஜரின் நினைவுகளில் வாழும் நெஞ்சங்கள் தவிர. இந்த கோவிலை தவிர !மக்களுக்காகச் செய்யப்பட்ட எல்லாம் அழிந்துபோய் விட்டது. மக்கள், இறைவனுக்காய் செய்த இக்கட்டிடத்தை தவிர !

என்னை சுற்றிச் சிலைகள், எழுத்துகள் வெட்டப்பட்டக் கற்கள், கற்களை அடுக்கிச் செய்த மிக பெரிய கற்றளி. எங்கு ஆரம்பித்திருக்கும் கோவில் என்று ஒன்றுக் கட்ட வேண்டும் என்ற எண்ணம்? சிவ சொரூபம் அப்படி எதைச் சொல்கிறது, எவ்வளவு ஆசை சிவத்தின் மேல் மக்களுக்கு? கால ஓட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் இந்தக் கோவிலுக்குள்? நான் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த பாதையில், ராஜ ராஜர் நடந்துச் சென்றிருப்பாரோ, அமர்ந்து இதை ரசித்திருப்பாரோ? நிச்சயம் இருக்கும். நம் எல்லோருடைய ரசனையையும் தாண்டியதாய் இருந்திருக்கும் அது. பிள்ளையின் மேல் தாய் கொண்ட பாசம். சோழர் தடம் பதித்த இடங்களில் நாம் நிற்கும் நேரம் எல்லாம், நிச்சயம் பொன்னியின் செல்வனின், உடையாரின் தாக்கமும் அதிகமாய் தான் இருக்கிறது நமக்குள் ! அவ்வளவு பேரும் நம் கண் முன்னே, நடமாடுகிறார்கள்!

அப்படியே திருச்சுற்று மாளிகையில் நடந்து போகிறேன். அவ்வபோது கோவிலை அந்தந்த இடத்தில் இருந்துக் கிடைக்கும் கோணத்தில் பார்த்து மகிழ்கிறேன். இன்னொரு பக்கம் திருச்சுற்று மாளிகையில் காண கிடைக்கும் ஓவியங்கள், இதை பார்க்கும் ஒவ்வொரு முறையும், எனக்குக் கோவிலின் உள்ளே, சாந்தார அறையில் உள்ள சோழர் கால ஓவியங்களை பார்க்கும் ஆசை வரும். புகைப்படங்கள் வேண்டாம், தொடக் கூட வேண்டாம், அதைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் நிறைய நாட்களாய் உள்ளது. புத்தகங்களிலேயே அவ்வளவு அழகாய், நேர்த்தியாய் உள்ளது, நேரில் எவ்வளவு அழகாய் இருக்கும்? ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்கள். திருச்சுற்று மாளிகையில் பல சிவ லிங்கங்களும் அதன் பின்னணியில் ஓவியங்களும் இருக்கிறது. பல கதைகள், பல தெய்வங்களின் ஓவியங்கள் இருக்கிறது. அப்படியே கணபதி சன்னிதியை கடந்துவிட்டேன். கருவூர் தேவர் சன்னதி, சில பல்லிகளை தேடியபடி மக்கள்! உடையார்படித்த எல்லோரையும் , கருவூரார் ஈர்ப்பார். நானும் தரிசனம் செய்து கொண்டு, முருகன் சந்நிதியை நோக்கி நடக்கிறேன். எல்லோருக்கும் என்ன, இந்த இடத்தின் மீது இவ்வளவு ஆசை? தஞ்சையை ஆண்ட எல்லா ஆட்சியாளர்களும் இங்கு தங்களுக்கென்று ஒரு முத்திரையை பதிக்க விரும்பியவரை போல ஒரு சன்னிதியைக் கட்டுவித்திருக்கிறார்கள்!


தேரில் அமைக்க பெற்றிருக்கும் வடிவமைப்பு, இந்த குதிரைகளை அவிழ்த்து விட்டால் ,ஓடத் தயாராய் இருக்கிறது போலத் தெரிகிறது என்பது போல, நேர்த்தியான அழகிய குதிரைகள். பெருவுடையார் சன்னிதி துவாரபாலகர்களுக்கும், முருகன் சன்னிதி துவாரபாலகர்களுக்கும் எத்துணை வித்தியாசம். பளிங்கு கற்கள் , கரிய நிறத்தில் எடுத்து செதுக்கியது போல உள்ளது முருகன் சன்னிதியில். நேர்த்தியான ஒரு முன்மண்டபம் அது மூடியேக் கிடக்கிறது. அப்படியே நடந்து பெருவுடையார் சன்னிதி அருகில் நடக்கிறேன். கோமுகம் பார்கிறேன், பூதகணம் ஒன்று, பெருவுடையார் கருவறையில் இருந்து அபிஷேக நீரை வெளியில் கொட்டும், கல்லை தாங்கி நிற்கிறது. அதை ஒரு கல்லைக் கொண்டு நிறுத்தியிருக்கலாம், ஆனால் அதிலும் ஒரு கலைநயம் கொண்டு ஈடுபாடோடு வடிவமைத்திருக்கும் அந்தச் சிற்பியை எத்துணை பாராட்டினாலும் தகும். அதையும் தாண்டி, இன்று ஒரு வேலை எடுத்துக்கொண்டால் அதை எவ்வளவுச் சீக்கிரம் முடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பது என்ற மன ஓட்டத்தோடு, ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, இதைப் பார்க்கும் போது, எவ்வளவு நேர்த்தியாகவும், ஈடுபாட்டோடும் வேலையை செய்யவேண்டும் என்றுச் சொல்வதுப் போல உள்ளது. வெளிச்சுவர் முழுக்க எழுத்துக்கள், எனக்கு கல்வெட்டு  படிக்க தெரியாது. ஆனால் ஆசை மட்டும் உண்டு. இன்றைக்கு உள்ள எழுத்துக்களின் தொடர்புக் கொண்டு இருக்கும் எழுத்துக்களில் சிலவற்றைத் தேடும் ஆர்வம் உண்டு. முடிந்தால், ராஜ ராஜ தேவர் பெயரையாவதுக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. சண்டிகேஸ்வரர் சன்னிதி, தரிசித்துக்கொண்டு, அந்தப் படிகளிலும் அமர்ந்து அந்த விமானத்தைப் பார்க்கும் ஆசை கொண்டது மனம். எவ்வளவு முறைப் பார்த்தாலும் சலிக்கப்போவதில்லை இது. பறந்துச் செல்ல சிறகிருந்தால் அந்த உச்சி கலசம் சென்றுக், குடமுழுக்கு அன்று அதற்கு அபிஷேகம் செய்ய, உடையார் நின்றிருப்பாரே அங்கு நிற்க ஆசை. ஆசைகளை அள்ளித்தருகிறது இந்தக் கோவில், இங்கு மிகப் பெரிய கோவிலைக் கட்ட ராஜ ராஜருக்கு ஆசையை உருவாக்கியது முதல்!


இன்னும் நடக்கிறேன், அம்மன் சன்னிதி நோக்கி. பெரியநாயகி, என்னும் பெயர். மண்டபத்தில் மேற்கூரையில் முழுக்க ஓவியங்கள், கதைச் சொல்லும் ஓவியங்கள். மேலே கழுத்தை உயர்த்திச் சில நிமிடங்கள் பார்க்கவே வலிக்கிறது, எப்படி இதை வரைந்திருப்பார்கள்? வண்ண குழம்புகள் கண்களில் பட்டால்? எண்ணிப் பார்க்கவே, பிரம்மிப்பாய் இருக்கிறது! அப்படியே வெளியே வந்தால், மிக பெரிய நந்தி, அவருக்கென்றுத் தனியாய் பெரிதாய் மண்டபம் அமைத்துக்கொண்டு. அங்கும் வண்ண ஓவியங்கள்! அடுத்து நந்தி மண்டபத்தின் பின் அமர்ந்து இந்த விமானத்தை ரசிக்கப்போகிறேன். எனக்கு முன் நந்தி மண்டபம், கொடிமரம், பெருவுடையார் சன்னிதி. இன்றுக் கட்டப்படும் கோவில்களைப் பார்க்கும் போது, பல மணிநேரம் நம்மை இங்கு உட்கார வைத்திருக்கும் இவற்றிடம் இருந்துப் பல நுணுக்கங்களைத் தெரிந்துக்கொண்டுக் கட்டத் தவறி இருக்கிறோம் என்று புரிகிறது. இன்றைக்கு நாம் கட்டிக்கொண்டிருக்கும் கோவில்கள், அடிப்படையான அளவுகளை கொண்டதாக தெரியவில்லை. மிக உயர்ந்தோ அல்லது மிக அதிக அகலம் கொண்டோ உள்ளது. நீள, அகல,உயரக் கோட்பாடுகள் பின்பற்றாததுப் போலத் தோன்றுகிறது.

ஆனால் தஞ்சை அப்படியில்லை. நாம் கற்றுக்கொள்ள, புரிந்துக்கொள்ள எவ்வளவோ உள்ளது.விழுந்து வணங்கிக்கொண்டு, பயணத்தை தொடர வேண்டும். பிரிய மனமில்லாமல் எழுந்து நடந்து ராஜராஜன் நுழைவாயல் கடக்கிறேன், இவ்வளவு நேரம் கொண்டு வந்த மகிழ்ச்சியைக் காணோம், மீண்டும் இந்த மண்ணில் நடக்கையில் அது என்னோடு ஒட்டிக்கொள்ளும். கேரளாந்தகன் நுழைவாயலும் கடந்துவிட்டேன். மீண்டும் என் கனவு தேசத்திற்குள் நுழைய நான் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். மீண்டும் பயணப்படுவேன் சோழ தேசத்திற்கு !