Friday, 18 March 2016

மல்லை 5

இந்தச் சிற்பத்தை பற்றி, என்ன எழுதுவது? பாலுச்சாமி ஐயா, இதை பற்றி  நானூறு பக்க புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதில் இருந்து, நான் மிக சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

மிக அழகிய, அர்ஜுனா/ பகிரதன் தவம் பற்றியது இந்த சிற்ப தொகுதி . இது யாரை பற்றி, என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தில் மாறுபடுகிறது. ஐயாவின் ஆய்வு என்ன என்று கடைசியில் பார்ப்போம். முதலாவதாக, இது ஒரு புடைப்புச் சிற்பம். இதில் மிக அதிக உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்கள், மிருகங்கள், கின்னரர்கள், கிம்ருடர்கள், கந்தர்வர்கள், கணங்கள், நாகர்கள் என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

தொகுதியின் இடையில், ஒரு ஓடை போன்ற அமைப்பும், அது அதன் இரு பக்கங்களின் ஒருங்கிணைப்பு பகுதியாக உள்ளது. வலதுபுறமும் உள்ள அனைவரும் அந்த நடு நீர் வீழ்ச்சியை நோக்கி வருவது போன்று அமைத்திருக்கின்றனர். அதே போலவே இடதுபுறமும். பாறையை, இரண்டு நிலையாகப் பிரித்திருக்கின்றனர். இப்போது, இந்த சிற்பத்தை பார்போம்.


மேல் பகுதியை முதலில் பார்போம்.முதல் வரியில், ஒரு சிங்கமும், சில கணங்களும் உள்ளன,அதன் கீழே ஒரு கின்னர தம்பதிகளும், கந்தர்வ தம்பதிகளும்,சூரியனும் உள்ளனர். சூரியனுக்கு பக்கத்தில், ஒரு மனிதரின் பாதி உருவம் மட்டும் தெரிகிறது, அவர் பரசுராமர். அதன் கீழே, ஒரு பலாமரம், அருகில் ஒரு வேடன்,அதன் அருகில், பல மரங்களின் தொகுப்பு, காட்டை உருவகப்படுத்தியுள்ளனர். அதற்கு பக்கத்தில் ஒரு குரங்கு, பலாப்பழம் கொண்டு செல்லும் வேடன், உடன் இன்னொரு வேடன், அவரின் காலுக்கடியில் மான், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் சிம்மம், பூத கணங்கள் சூழ சிவபெருமான். அவரை நோக்கி தவம் செய்யும் ஒருவன்( அர்ஜுனன்? பகிரதன்?) இந்த விளக்கத்தை இறுதியில் பார்ப்போம். 

அப்படியே வலதுபுறம் பார்ப்போம், பல கின்னர தம்பதியர்கள், கிம்ருடர்கள், கந்தர்வ தம்பதியர்கள், சிம்மம், கோழி, சந்திரன், முதலானவர்கள் உள்ளனர். கீழ் தலத்தில், ஒரு யானை கூட்டம், நீர் அருந்தும் காட்சி, ஒரு பூனை தவம் இயற்றும் காட்சி, இடது புறம், ஒரு சிறிய கோவில் அதன் வெளியே சோகமாக ஒரு பெரியவர், அவர் முன்னே சில சீடர்கள். ஆற்றில் குளித்து முடித்து பன்னிரண்டு மணிக்கு, சூரியனை வணங்கும் முறையில் ஒருவர், துணிகளை பிழியும் ஒருவரையும் செதுக்கியுள்ளனர். இப்போது நடுவில் உள்ள, பிளவை பார்போம், அதில் நாகராஜன், அவன் மனைவி உள்ளனர்.


இதன் கதை என்ன, எதை குறிக்கும் சிற்பம் இது?

கதை ஒன்று – இது பகிரதன் கதை. பகிரதனின் முன்னோர்கள் ஒரு முனிவரின் சாபத்தால் எரிந்து, சாம்பலாகி விடுகின்றனர். அவர்களின் சாப விமோசனம் பெற, கங்கை நீரை கொண்டுவர வேண்டும் என்று முனிவர் கூறுகிறார். பல மன்னர்கள் முயன்றும் முடியாது போகவே, பகிரதன் தன் முன்னோர்களின் சாபம் விலக, கங்கையிடம் பூமிக்கு வருமாறு கேட்கிறான். கங்கையோ, அவளுக்கு சம்மதம் என்றும்,  சிவபெருமானை நோக்கி தவம் செய்து மட்டுமே அவளை பூமிக்கு அழைக்க முடியும் என்று கூறுகிறாள். அவனும் பல காலம் தவம் இயற்றி சிவபெருமானின் தரிசனம் பெறுகிறான்.

இப்போது, சிற்பத்தை பாருங்கள், பகிரதன் அருகில், சிவன் பூதகணங்களோடு, வந்து, அவன் கேட்ட வரத்தை அருள்கிறார். கங்கை பூமிக்கு வருகிறாள். அதுதான் அந்த நடு பிளவு, அதில் நாக குடும்பங்களும் வருகின்றன. மக்கள் நீராடி, சூரிய பூஜை செய்கின்றனர். மிருகங்கள் நீராடி மகிழ்கின்றன. பகிரதனின் முன்னோர் சாபமும் தீர்கின்றது. இந்த நிகழ்வை பார்க்க, தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்ருடர்கள், மிருகங்கள் எல்லாம் வருகின்றன.

இரண்டாம் கதை – ஐயா , அவர்களின் புத்தகத்தில் இருந்து.
இதில், தவம் இயற்றும் ஒருவர், சிவன், முனிவர்கள் இவர்களை தவிர வேறு யாரையும் மைய்யப்படுத்தாமல், பகிரதனின் கதைச் சொல்லப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் , எதற்காக இந்த சிற்ப தொகுப்பில் இடம்பெறுகிறார்கள்? என்று ஆய்வு செய்து இந்த நூலை  வெளியிட்டிருக்கிறார்கள்.

இங்கு, அர்ஜுனன் தவம் செய்கிறான். பாரதப்போரில், வெற்றி பெற பாசுபதாஸ்தரம்  சிவனிடம் வாங்குவதற்காக. சிவன் அவர் கையில் அந்த அஸ்திரத்தை வைத்திருக்கிறார். அவன் இமயமலையில் தவம் செய்கிறான். கங்கை வழிகிறாள்!அங்கிருக்கும் மிருகங்கள் அனைத்தும், மகாபாரத கதைப்படி , அர்ஜுனன் தவம் இயற்றும் பகுதியில், இருக்கும் மிருகங்கள். கின்னரர்களும், கிம்ருடர்களும், அந்த பகுதியில் இருந்தவர்கள். அங்கு உள்ள கங்கையில் நீராடுவதும், மிருகங்கள் நீர் அருந்துவதும் சிதரிக்கப்பதுள்ளது. அவன் பாசுபதாஸ்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது, பரசுராமர் இமய மலைக்கு மேல இருந்து பார்க்கிறார்.

கீழே உள்ள பூனையின் பின்னணி, துரியோதனன், ஒரு பூனையின் கதையை தருமருக்கு  தூது சொல்லி அனுப்பினான் . அதாவது, ஒரு பூனை, சாது வேடம் போட்டு, எலிகளை நம்பவைத்து ஏமாற்றியதாம். பூனையை, நம்பி எலிகளும் அதை வழிபட தொடங்குகிறது. கொஞ்சம் நாட்கள் கழித்து, எலிகளின் எண்ணிக்கை குறைய துவங்குகிறது. ஒரு புத்திசாலியான எலி, பூனையின் கழிவை ஆய்வு செய்து, அதில் எலிகளின் முடிகள் இருப்பதை உறுதி செய்து, மீதம் இருக்கும் எலிகளை பூனையிடம் இருந்து காப்பாற்றுகிறது. இதில் வரும் பூனையை, போல தான் தருமரும் என்று தூது சொல்வதாக ஒரு கதை பாரதத்தில் உள்ளது. அதன் சிற்பம் இது.

அடுத்து, அந்த சிறிய கோவில், இதில் உள்ளே, விஷ்ணு, இறைவனாய் , வெளியில் அமர்ந்து பாடம் சொல்லும் குருவும் விஷ்ணுவே, என்பதாய் இருக்கிறது.

மேலும், இதில் இருக்கும் குரங்குகளும் இது இமலயத்தை குறிக்கும் சிற்பம் என்பதற்கு சான்றாய், அங்கு இருக்கும் குரங்குகளின் வடிவில் உள்ளது.

அந்த யானைகளை, பார்போம் இதில் பத்து யானைகள் உள்ளன. அனைத்தும் நீர் அருந்த வருபவை. யானைக்கு நான்கு தந்தங்கள் உள்ளது. அதை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இதுவும், யானைகளின் உடற்கூறுகள் நன்றாக படித்து, அதன் படி வடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில பகுதிகள் இதில் முற்று பெறாமல் உள்ளன. சில கோட்டுருவங்கலாகவும், சில செதுக்கல்கலாகவும் உள்ளன. ஆனால் முழுமை அடையவில்லை

இந்த சிற்பம் வடிப்பதற்கு முன், இதைப் போலவே சிறியதாய் செய்து பார்த்த சிற்பம், மகிஷாசூரமர்தினி குடைவரைக்கு அருகில் உள்ளது.
நேரில் சென்று பார்த்து வாருங்கள். அர்ஜுனன் தவம் இயற்றுகையில், இமலயத்தில் இருந்த எல்லா உயிர்களும் பார்தனவாம், நாமும் பார்த்து வருவோம்.




Thursday, 17 March 2016

மல்லை 4

இதுவும் நமக்கு தெரிந்தக் கதைதான் ! வாமன அவதாரத்தின் கதை ! தெரியாதவர்களுக்கு, கதைச் சுருக்கம் சொல்கிறேன். மகாபலி என்று ஒரு அசுரன் இருந்தான். மிகப் பெரிய விஷ்ணு பக்தன். அவன் குரு, சுக்ராச்சாரியாரின் சொல் படி, ஒரு பெரிய யாகம் நடத்துகிறான். யாகம், நடந்து முடிந்தால், அவன் இந்திர பதவிக்கு தகுதி உடையவனாகி விடுவான்! விடுவார்களா, இந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிடுகிறார்கள்! ஒரு அசுரன், இந்திர பதவிக்கு வரவே கூடாது, ஆவண செய்யுங்கள் என்று! கிளம்பினார், மகாவிஷ்ணு, ஒரு சிறிய உருவம் கொண்டு. வாமன அவதாரம் ! ஒரு குடை, கமண்டலம், கொண்டு வரும் சிறிய உருவத்தை , சந்தேகத்தோடு பார்கிறார் சுக்ராச்சாரியார் . மகாபலியை எச்சரிக்கை செய்கிறார். அவனைப் பார்த்தால், சரியாக இல்லை, எதையும் தானம் தருவேன் என்று ஒப்புக்கொள்ளாதே என்கிறார். ஆனால், யாகத்தின் முடிவில் யார் எதை தானமாக கேட்டாலும் தரவேண்டும் என்பதுக் கட்டாயம்! மகாபலிக்கு, வேறு வழி இல்லை, யாகம் முற்றுப் பெற வேண்டும் என்றால் தானம் வழங்கியே ஆக வேண்டும்.
அருகில் வந்து நிற்கிறார் வாமனன் . என்ன வேண்டும் என்று கேட்கிறான், பலி! எனக்கு என்ன, நான் வாழ மூன்றடி மண் வேண்டும், மன்னா என்று தயங்கி தயங்கி கேட்கிறார். சுக்ராச்சாரியாருக்கு, எதோ பொறித் தட்டி, எப்படியாவது இந்த யாகத்தை நிறுத்த தேவர்கள் செய்யும் சூது இது என்று எண்ணம் கொண்டு , ஒரு வண்டாக மாறிக் கமடலத்தின் உள்ளே சென்றுவிடுகிறார். வாமனனோ ஒரு தர்பை புல்லை எடுத்து, கமண்டலத்தின் உள்ளேக் குத்தி விடுகிறார் ! அது குருவின் கண்ணை காயப்படுத்திவிடுகிறது ! அங்கிருந்துப் பறந்து விடுகிறது வண்டு !
பலிக்கு, புரிந்து விட்டது, வேறு வழியே இல்லை! தானம் , தந்தாக வேண்டும்! எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் கேட்ட மூன்றடி மண் என்று நீர் வார்த்துத் தானம் கொடுக்கிறார் !
இது தான் முன்கதை! இப்போது இந்த சிற்ப்பத்தை பாருங்கள்! 



வாமணன், உயர்ந்து விஸ்வருபம் கொண்டு, திருவிக்ரமனாய் காட்சித் தருகிறார். ஒரு அடியில் மண் உலகையும், இரண்டாம் அடியில் வானுலகையும் அளந்து, மாபலியை பார்த்து, மூன்றாம் அடிக்கு மண் வேண்டுமே என்றுக் கேட்கிறார்!திகைத்து போன மகாபலி, தன் தலையின் மீது கால் வைத்து, மூன்றாம் அடியை அளக்கச் சொல்லிக் கீழே அமர்கிறான்! அப்படியே அவனை பாதாள லோகம் வரை, அனுப்புகிறார் வாமணன்!
இப்போது, இந்த சிற்ப்பத்தை நோக்குங்கள், விக்ரமரில் இருந்து ஆரம்பிப்போம் ! விஸ்வருபம் கொண்டு நிற்கிறார்! ஒரு கால் மண்ணில், இன்னொரு கால் தூக்கிய நிலையில் !காலின் அடியில் நால்வர் இருகின்றனர் ! அவருடைய தூக்கிய காலுக்கு அடியில், இருவர் இருகின்றார். கைகள், அவர்களின் வாளை நாடி இருகின்றது !முகத்தில் ஒரு கோபம், பிரமிப்பு! தங்களால், அடக்க கூடிய, முடிந்த ஒரு எதிரியின் முன் தங்கள் இல்லை என்பது தெரிந்தும், தங்களின் அரசருக்காக போராட தயாராகும் அசுர கூட்டம்! ஒருவன் , காலுக்கு அடியில் கிடக்கும் நிலையில் இருக்கிறான், அடுத்தவன் வாளை உருவி, திருவிக்ரமனை பார்த்து வியந்து கொண்டிருக்கிறான்!
கொஞ்சம் மேல் நோக்கி பார்த்தால், ஒளி வட்டங்களோடு இடது புறமும், வலதுபுறமும் இருவர் உள்ளனர்! அவர்கள், சூரியனும் , சந்திரனும் அவார்கள் !அதாவது, திருவிக்ரமரின் கால், சந்திர மண்டலத்தையும், சூர்ய மண்டலத்தையும் தாண்டி வான் வெளியில்  பயணித்துக் கொண்டிருகிறது. அங்கு அந்தரத்தில் ஒருவன் தொங்கிக்கொண்டிருகிறான். அவன், பலியின் முக்கிய வீரன்! அரசனை, காக்க போரிட்டு வாமனனால் தூக்கி எறியப்பட்டு தொங்கிக்கொண்டிருகிறான் ! விக்ரமரின், தூக்கிய கால்கள், சத்தியலோகத்தை அடைந்த போது, அங்கு நான்முகன், தன் தந்தையின் கால்கள் இவை, என்பதை அறிந்து பாதபூஜை செய்கிறார் !
பிறகு, திருவிக்ரமரின் உருவம் , விஸ்வருபதை காண்பிப்பதற்காக, பிறர் உருவங்களை சிறிதாய் செதுக்கி உள்ளனர்! எட்டு கரங்களுடன், ஆயுதங்கள் ஏந்திய உருவம்!

இதை போன்ற சிற்ப்பங்களை காண, கொடுத்து வைத்திருக்க வேண்டும்! பாலுச்சாமி ஐயா, இந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டில் இருந்திருக்கும் என்று கூறினார்! எப்படி இருந்தாலும், இந்த சிலையை, இவ்வளவு நுணுக்கமாக இதுவரை நான் பார்த்ததில்லை ! அடுத்தமுறை, இன்னும் நிறைய பார்க்க வேண்டும் ! மல்லை பயணங்கள் தொடரும் ....

Wednesday, 16 March 2016

மல்லை 3

அடுத்த பதிவு, ஒரு சிறிய சிற்ப தொகுதியை பற்றி. ஆரம்பிக்கவே இல்லை, என்று கூறுவதா? இல்லை, நமக்கு அதன் முழுமை புரியவில்லையா என்று தெரியவில்லை !
இந்த தொகுதி இரண்டு விதமான கருப்பொருளை ஆராய்ச்சியாளர்களுக்கு தருகிறது ! முதலாவது, கோடை காலத்தில், யானைகள் தண்ணீர் தேடி செல்லும். அப்படி சென்ற ஒரு குழு, தண்ணீரை பார்த்ததும், ஆசை தீர அருந்தும் காட்சி. இரண்டாம் கதை, ஜடாகா கதைகளில் வரும் ஒரு கதை. ஒரு யானைக்கும், கபிஞ்சலி என்ற பறவைக்கும், குரங்கிற்கும் ஒரு மரத்தின் அடியில் வாக்குவாதம். தங்களில் யார், அந்த மரத்தை சொந்தம் கொண்டாடுவது என்று. இந்த இரண்டு செய்திகளோடும், தொடர்புடைய இந்த சிற்பத்தை பார்போம்.


ஒரு பறவை, ஒரு குரங்கு , சில யானைகள் ! என்ன இருக்கிறது இதில்.... இது பல்லவர்களின் கலை பாணியில் ஒரு அடுத்த முயற்சி. குடைவரை, ரதங்கள், கட்டுமான கோவில்களை போல, இதுவும் ஒரு வகை. கொட்டோவியமாகவும் இல்லாமல், முழுமையாக முப்பரிணாம சிற்பமாகவும் இல்லாமல், இரண்டிற்கும் நடுவே புடைப்பு சிற்பமாக இருக்கிறது இது !

அடுத்து இங்கு செதுக்கி இருக்கும், யானை ! இவ்வளவு நுணுக்கமாக யானையை யாரும் இதுவரை செதுக்கவில்லையாம்! ஒரு பெரிய யானை, அதன் கீழே துதிக்கையால் இல்லாமல், வாயால் தண்ணீரை அருந்த துடிக்கும் ஒரு குட்டி யானை, அதன் முன்னே சிறியதாய் ஒரு யானை, அது தூரத்தில் இருக்கிறதாம், அதனால் அது சிறிதாக தெரிகிறது, அந்த பெரிய யானைக்கு மேல் ஒரு யானை, தன் துதிக்கையை வளைத்தது போல உள்ளது !

அதனால் என்ன? இதெல்லாம் எதற்கு? கொஞ்சம் மேலே பார்த்தோம் என்றால், ஒரு சிறிய பள்ளம் போல வெட்டு. அந்த பாறையின் மேலே ஆரம்பித்து, யானைகளின் மேல் உள்ள நிலை வரை செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல் ஒரு தொட்டி.. அது இப்போது இல்லை ! தொட்டி இருந்தபோது, அதில் நீரை நிறைத்து, வழிய விட்டால், அந்த சிறிய பள்ளம் வழியே, தண்ணீர்,



யானைகளை அடையும்... என்ன ஒரு தொலைநோக்கு பார்வை ! தண்ணீர் தேடும் யானைகள் ! தண்ணீர் குடிக்க, துதிக்கையை வளைத்து பிடிக்கும் ஒரு யானை ! தண்ணீரில் ஆசை தீர விளையாடு ஒரு யானை! அதுவும், துதிக்கையால் இல்லாமல்,தன் வாயால், உடலை கீழே இறக்கி, அது படுத்திருப்பதை போல அழகாக வடிக்கப்பட்டிருகிறது ! பெரிய யானை, நிஜமாகவே ஒரு யானையின் உடற்கூறியல் பற்றி படித்து, அறிந்து கொண்டு வடித்திருக்கின்றனர் ! அழகான சிறிய புடைப்பு சிற்பம் !


Tuesday, 15 March 2016

மல்லை 2

அடுத்ததாக நாங்கள் பார்த்தது புலிக் குகை என்று அழைக்கப்படும் இடம். இதை ஏன் புலிக் குகை, என்று அழைகின்றனர் என்று தெரியவில்லை , என்று ஐயா பாலுச்சாமி கூறினார்கள். அங்கு புலியும் இல்லை, அது குகையும் இல்லை!




சரி , என்னதான் இருக்கிறது இங்கு ? ஒரு பெரிய பாறையை, இரு பாகங்களாய் பிரித்து, ஒரு பக்கம் ஒரு அழகிய சிற்ப தொகுப்பை உருவாக்கி உள்ளனர். மேலே இருந்து பார்ப்போம், நடுவில் ஒரு யாளி, நேரே நம்மை பார்ப்பது போல உள்ளது. அடுத்து அதன் பக்கத்தில், இரண்டு புறமும் இரண்டு யாளிகள், சற்றே சாய்ந்த கோணத்தில் நம்மை பார்க்கின்றன, அடுத்து இரண்டு யாளிகளும் சற்று தலையை உயர்த்தி நடுவில் இருக்கும் யாளியை பார்ப்பது போல, அதை போலவே இன்னும் இரண்டு யாளிகள், கடைசியாக கீழே இருக்கும் யாளிகள் அமைதியாக மண்ணை நோக்கி பார்க்கிறது !

கட்டிட கலையியலில் , எந்த ஒரு படம் வரைந்தாலும் அது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உள்ளது! அப்போது தான் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்! இதை எல்லாம் பின்பற்றி இந்த தொகுதி உள்ளது! அப்படியானால், பல்லவர் காலத்தில், சிற்ப தொப்பிற்கு என்று பல விதிகளை வைத்திருந்தர் போலும்! இது ஒரு வகையில், நடுவில் இருக்கும் யாளியை முதன்மைப்படுத்துகிறது! அதன் தன்மையும், அளவும், கம்பீரமும் அதையே வெளிப்படுத்துகிறது ! அதன் நீண்ட பற்கள், பயத்தை விட அமைதியையே எனக்கு காண்பிப்பதாய் தோன்றுகிறது ! எல்லா யாளிகளுக்கும் கொம்பு உள்ளது ! அனைத்து யாளிகளின் கண்களிலும், பற்களின் அடுக்கிலும் அதன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதாய் நினைக்க செய்கிறது! இன்னும் ஒரு விசயமும், இதில் இருக்கிறது, இந்த யாளிகள் அனைத்தும், கண்களை மூடிக்கொண்டு எதையோ ரசிப்பதைப் போலவும் உள்ளது ! இந்த யாளிகளின் வரிசை, ஒரு பூத வரிசை போல, ஹாரம் என்று சொல்லப்படும் பறவைகளை, பூதங்களை கொண்டு அமைக்கப்படும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றார்கள் ஐயா !
அடுத்த நிலையில் ஒரு சிறிய மேடை, இரு பக்கங்களிலும் யாளியின் மீது வீரர்கள் , அடுத்து இரு பக்கங்களிலும் துவார பாலகர்களை வைக்கும் இடம் போல ஒன்று உள்ளது! ஐயா , அவர்களின் கூற்றுப்படி , இது எதற்காக செய்திருக்கிறார்கள் என்பது, தீர்க்கப்படாத விசயமாக இருக்கிறது ! மக்களை சந்திக்க அரசன் வந்து அமரும் மேடை என்று ஒரு சிலரும், கோவில் என்று சிலரும் சொல்கிறார்களாம் , ஆனால் நிச்சயமாக எதற்காக இந்த மேடை என்று சொல்லமுடியவில்லை ! சிவனுக்கான ஒரு கோவிலாய் இருக்கலாம் என்றும், சோமாஸ்கந்தர் சிற்ப தொகுதிக்காகவும் இதை செய்திருக்கலாம் என்று ஐயா கூறினார்கள் !
அதன் கீழே, இரண்டு யாளிகள், சிற்ப வேலை முடியாத நிலையில் ஒரு கையை தூக்கிய, நிலையில் உள்ளது. நடுவில் படிகள் உள்ளது.


அடுத்து, யாளிகளின் வருசைக்கு அடுத்து உள்ள முற்று பெறாத தொகுதி. இரண்டு யானைகளும், ஒரு குதிரையும், நடுவே ஒரு முடிவடையாத தூணும், அதன் இரு புறமும் இரண்டு சிறிய செவ்வகம் , அதன் உள்ளே இரண்டு சிலைகள் உள்ளது. யார் என்று அறிய முடியாத அளவிற்கு சிதைந்து உள்ளது. இது என்ன? எதை குறிக்கிறது ? ஐயாவின் கூற்று, இரண்டு யானையையும், ஐராவதம் என்று கொள்கிறோம், சுப்பிரமணியன், இந்திரன் இவர்கள் இருவரின் வாகனங்களுமே யானை தான். மேலே, இருக்கும் அடையாளம் காண முடியாத சிற்பங்கள், இந்திரனாகவும், சுப்பிரமணியராகவும் இருக்கலாம்.
அப்படியே, நடந்து முன் நோக்கி வந்தோம், அங்கு ஒரு பெரிய யாளியும் , அதன் வயிற்று பகுதியில் ஒரு சதுரமும் செதுக்கப்பட்டுள்ளன. இது என்ன, வயிற்றில் செதுக்கள் ? பதில், மிக புதிது! எப்படி எல்லாம் யோசனை செய்து, சிற்பங்களை வடித்திருகின்றனர் ? அதாவது , இங்கு மகிஷாசுர மர்த்தினியின், வாகனமான சிம்மமே, கோவில் ! அதன் நடுவே, வயிற்றில் தேவிக்கென ஒரு கருவறை, அவள் சிலை ! வாகனமே கோவில்! இதை எப்படி கூற முடிந்தது? கடற்கரை கோவிலில் இதை போலவே ஒரு சிற்பம் உள்ளது ! முழுமையான சிற்பம் !





என்னவெல்லாம், செய்ய முடிந்திருக்கிறது? எத்துணை சிந்தனை, எவ்வளவு முன்னேறிய நிலை! நாம் இதை எல்லாம் தெரிந்து கூட பார்ப்பதில்லை !மல்லை, தொடரும் !! 


Monday, 14 March 2016

மல்லை 1

நிறைய நாட்களாக, மல்லையை பற்றி எழுத நினைத்தும், முடியாத ஒரு நிலை. என்னவென்று தெரியவில்லை. ஒரு வேலை இப்படி ஒரு வாய்பிற்காக காத்திருந்தது போலும் .
ஒவ்வொரு செதுக்களுக்கும், ஒரு நூறு விளக்கங்கள் தரப்பட்டது. இப்போது தான் தெரிகிறது, எவ்வளவு மேலோட்டமாக, நாம் சிலைகளையும், கலையையும் படிக்கிறோம் என்று.
நானும், ஒவ்வொரு சிலைக்கும் சில பக்கங்கள் ஆவது எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். முதன் முதலில், இந்த சிற்பம். மகிஷாசுரமர்தினி சிற்பம்.



சிற்பத்தின் கதை இதுதான், மகிஷன் என்ற அரக்கன், தவங்கள் இயற்றி சாகா வரம் வேண்டும் என்று கேட்கிறான். பிரம்மன் தயங்கி, முடியாது என்று சொல்லி, வேண்டுமானால் ஒரு பெண்ணின் கையால் மட்டுமே மரணம் என்று வரம் தருகிறேன் என்று சொல்கிறார். பெண்ணாவது, நம்மை கொல்வதாவது, என்று இறுமாப்பு கொண்டு சரி என்கிறான் மகிஷன்.
வரம் வாங்கியதும், எல்லா அசுரரும் செய்வது போலவே, மகிஷனும் செய்கிறான் . பிற உயிரை துன்புறுத்தி அவன் கொண்ட தவ வலிமையை குறைத்துக்கொள்கிறான் . மும்மூர்த்திகளிடன் சரன் அடைகின்றனர் உயிர்கள். மூவரும் சேர்ந்து அழகிய ஒரு இளம் பெண்ணை சிருஷ்டிக்கின்றனர் . சிம்மத்தின் மேல், அழகிய பெண், பார்ப்பவர் கண்ணை கவரும் தேவி. இறங்கி வருகிறாள், மண்ணிற்கு. மகிஷனை பார்க்கிறாள். அவனும் அவள் அழகில் மயங்கி, கிறங்கி வரத்தை மறந்து போகிறான். சாந்தமே உருவாகி நின்ற அழகி, நொடியில், நிமிர்ந்து நிற்கிறாள். நிற்கிறாளா இல்லை, விஸ்வருபம் கொள்கிறாள்! மகிஷனின் மரணமாய், அவன் அநிதியின் முடிவாய் ! வந்துள்ளது தன் முடிவை எழுத பிரம்மன் அனுப்பிய, அந்த பெண் என்ற எண்ணம் வந்தவுடன் மகிஷன் மிரள்கிறான் . இது வரை முன்கதை ....
இந்த சிற்பம் அடுத்த களம். அதை புகைப்படம் எடுத்தது போன்ற நிகழ்வு. தேவி சிம்மத்தின் மீது, சீறி வருகிறாள். அவள் சிம்மம் கூட, போர் வெறி கொண்டு வருகிறது. பூதகணங்கள் எல்லாம், மகிஷனின் கையையும், காலையும் பிடித்து இழுத்து, “ யாரிடம் தப்பிக்க பார்க்கிறாய்?”” “ஓடறான், ஓடறான் , விடாத “ என்பதாய், அவனை பிடித்து இழுத்து தேவியிடம் சேர்க்க பார்கின்றது.
“விடுங்கள், விடுங்கள் “, என்று ஓட்டம் பிடிக்கிறான் மகிஷன். மடங்கிய கால்கள், ஒதறும் கைகள், முகத்தில் ஒரு பயம் ... மரணம் தன்னை நெருங்கி விட்டதை உணரும் தருணம்.
“எதுவரை போகிறான் , பார்க்கலாம் “, என்பதை போல நிற்கிறாள், தேவி! ஒரு கால் தரையிலும், மறுகால் சிம்மத்திலும் வைத்து, சாந்தமாய் , தீரமாய் ஆயுதங்களை ஏந்தி போர் கோலத்திலும் நளினமாய் நிற்கும் தேவி! அவளை சுற்றி, மகிழ்ச்சியில் கணங்கள்! எதிரி அழிகிறான்! பயம் காட்டியவன், பயம் கொண்டு ஓடுகிறான்! நான், நீ என்று பிடித்து கொடுக்க முன்வரும் கணங்கள்!



எப்படி இப்படி ஒரு கற்பனையை கண் முன்னே கொண்டு வந்து, நிறுத்தி இருக்கின்றனர் சிற்பிகள்! “மகிஷனை கொல்லும் பெண் தெய்வம்” இது மட்டுமே இந்த சிலையின் கரு. ஆனால், இதில் எத்துணை உணர்ச்சிகள் தெரிகின்றது ? ஐயா பாலுச்சாமி கூறினார், பல்லவ சிற்பங்களின் சிறப்பு என்னவென்றால், அவை ஒரு செயலை செய்யும் நிலையில் வடிக்கப்படிருப்பதே... அதாவது, மகிஷன் ஓடுபவனை போலவும், தேவி துரத்துபவளை போலவும், கணங்கள் பறப்பதை போலவும் உள்ளது. அவை அந்த சிலையில் வாழும் கதைக்கும் நிதமும் உயிர் கொடுத்துக்கொண்டு உள்ளன. அடுத்தமுறை, மல்லை செல்லும் போது, சாளுவன் குப்பத்தில் உள்ள, அதிரானசண்ட குடைவரை சிவன் கோவில் முன், உள்ள மகிஷாசுர மர்தினி சிற்பத்தை கண்டு வாருங்கள்.....