நிறைய நாட்களாக, மல்லையை பற்றி எழுத நினைத்தும்,
முடியாத ஒரு நிலை. என்னவென்று தெரியவில்லை. ஒரு வேலை இப்படி ஒரு வாய்பிற்காக
காத்திருந்தது போலும் .
ஒவ்வொரு செதுக்களுக்கும், ஒரு நூறு விளக்கங்கள்
தரப்பட்டது. இப்போது தான் தெரிகிறது, எவ்வளவு மேலோட்டமாக, நாம் சிலைகளையும்,
கலையையும் படிக்கிறோம் என்று.
நானும், ஒவ்வொரு சிலைக்கும் சில பக்கங்கள் ஆவது
எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். முதன் முதலில், இந்த சிற்பம். மகிஷாசுரமர்தினி
சிற்பம்.
சிற்பத்தின் கதை இதுதான், மகிஷன் என்ற அரக்கன்,
தவங்கள் இயற்றி சாகா வரம் வேண்டும் என்று கேட்கிறான். பிரம்மன் தயங்கி, முடியாது
என்று சொல்லி, வேண்டுமானால் ஒரு பெண்ணின் கையால் மட்டுமே மரணம் என்று வரம்
தருகிறேன் என்று சொல்கிறார். பெண்ணாவது, நம்மை கொல்வதாவது, என்று இறுமாப்பு கொண்டு
சரி என்கிறான் மகிஷன்.
வரம் வாங்கியதும், எல்லா அசுரரும் செய்வது போலவே,
மகிஷனும் செய்கிறான் . பிற உயிரை துன்புறுத்தி அவன் கொண்ட தவ வலிமையை குறைத்துக்கொள்கிறான்
. மும்மூர்த்திகளிடன் சரன் அடைகின்றனர் உயிர்கள். மூவரும் சேர்ந்து அழகிய ஒரு இளம்
பெண்ணை சிருஷ்டிக்கின்றனர் . சிம்மத்தின் மேல், அழகிய பெண், பார்ப்பவர் கண்ணை
கவரும் தேவி. இறங்கி வருகிறாள், மண்ணிற்கு. மகிஷனை பார்க்கிறாள். அவனும் அவள்
அழகில் மயங்கி, கிறங்கி வரத்தை மறந்து போகிறான். சாந்தமே உருவாகி நின்ற அழகி, நொடியில்,
நிமிர்ந்து நிற்கிறாள். நிற்கிறாளா இல்லை, விஸ்வருபம் கொள்கிறாள்! மகிஷனின்
மரணமாய், அவன் அநிதியின் முடிவாய் ! வந்துள்ளது தன் முடிவை எழுத பிரம்மன் அனுப்பிய,
அந்த பெண் என்ற எண்ணம் வந்தவுடன் மகிஷன் மிரள்கிறான் . இது வரை முன்கதை ....
இந்த சிற்பம் அடுத்த களம். அதை புகைப்படம்
எடுத்தது போன்ற நிகழ்வு. தேவி சிம்மத்தின் மீது, சீறி வருகிறாள். அவள் சிம்மம்
கூட, போர் வெறி கொண்டு வருகிறது. பூதகணங்கள் எல்லாம், மகிஷனின் கையையும், காலையும்
பிடித்து இழுத்து, “ யாரிடம் தப்பிக்க பார்க்கிறாய்?”” “ஓடறான், ஓடறான் , விடாத “
என்பதாய், அவனை பிடித்து இழுத்து தேவியிடம் சேர்க்க பார்கின்றது.
“விடுங்கள், விடுங்கள் “, என்று ஓட்டம்
பிடிக்கிறான் மகிஷன். மடங்கிய கால்கள், ஒதறும் கைகள், முகத்தில் ஒரு பயம் ...
மரணம் தன்னை நெருங்கி விட்டதை உணரும் தருணம்.
“எதுவரை போகிறான் , பார்க்கலாம் “, என்பதை போல
நிற்கிறாள், தேவி! ஒரு கால் தரையிலும், மறுகால் சிம்மத்திலும் வைத்து, சாந்தமாய் ,
தீரமாய் ஆயுதங்களை ஏந்தி போர் கோலத்திலும் நளினமாய் நிற்கும் தேவி! அவளை சுற்றி,
மகிழ்ச்சியில் கணங்கள்! எதிரி அழிகிறான்! பயம் காட்டியவன், பயம் கொண்டு ஓடுகிறான்!
நான், நீ என்று பிடித்து கொடுக்க முன்வரும் கணங்கள்!
எப்படி இப்படி ஒரு கற்பனையை கண் முன்னே கொண்டு
வந்து, நிறுத்தி இருக்கின்றனர் சிற்பிகள்! “மகிஷனை கொல்லும் பெண் தெய்வம்” இது
மட்டுமே இந்த சிலையின் கரு. ஆனால், இதில் எத்துணை உணர்ச்சிகள் தெரிகின்றது ? ஐயா
பாலுச்சாமி கூறினார், பல்லவ சிற்பங்களின் சிறப்பு என்னவென்றால், அவை ஒரு செயலை
செய்யும் நிலையில் வடிக்கப்படிருப்பதே... அதாவது, மகிஷன் ஓடுபவனை போலவும், தேவி
துரத்துபவளை போலவும், கணங்கள் பறப்பதை போலவும் உள்ளது. அவை அந்த சிலையில் வாழும் கதைக்கும்
நிதமும் உயிர் கொடுத்துக்கொண்டு உள்ளன. அடுத்தமுறை, மல்லை செல்லும் போது, சாளுவன்
குப்பத்தில் உள்ள, அதிரானசண்ட குடைவரை சிவன் கோவில் முன், உள்ள மகிஷாசுர மர்தினி
சிற்பத்தை கண்டு வாருங்கள்.....
No comments:
Post a Comment