Sunday, 26 July 2015

கங்கை கொண்ட சோழபுரம் - 2

என் முதல் பயணம், கங்கை கொண்டசோழபுரத்தை பற்றிய எந்த தகவலும் தெரிந்து கொள்ளாத போது நடந்தது. அதை பற்றி நிறைய தெரிந்து கொண்டு  மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம். விட்டுப்போன எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். நண்பரின் மூலம் விமானத்தின் உட்பகுதியை பார்க்கவும் அனுமதி பெற்றுக்கொண்டேன். மாளிகை மேடு, ராஜேந்திர  சோழன் அருங்காட்சியகம் எல்லாம் காண வேண்டும். மிக அதிக எதிர்பார்ப்புடன் என் பயணம் ஆரம்பித்தது. இந்த முறை சில சரித்திர கதைகளில் இருந்து கங்கையின் அழகை வரிகளில் படித்து படித்து, நெஞ்சில் நிறுத்தியே இருக்கிறேன். ஒரே கல்லால் ஆன நவக்கிரக சிலை, பிக்சாண்டார் மூர்த்தி, வாணி, சண்டேஷ்வர அணுகிரக மூர்த்தி, விமானத்தின் உட்கூடு, திருசுற்று மாளிகை, வைக்கப்பட்டுள்ள சிலைகள், சாந்தார அறை என்று பலவற்றை பற்றி அறிந்துக்கொண்டு காணவே செல்கிறேன். அம்மாவும் அப்பாவும் என்னோடு இனிமையாய் ஒரு புதிய கதையை, வரலாற்றை அவர்களோடு நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்ற எண்ணத்தோடு பயணிக்கிறார்கள். அதிகாலை முதலே நான் அந்த நிகழ்விற்க்காய் காத்திருக்கிறேன். ராஜேந்திரன் நின்ற இடத்தில் எல்லாம் நான் நிற்கப் போகிறேன். காற்றோடு கலந்த, அந்த மாமன்னனின் கனவு கோட்டையில் உட்புகுந்து அதன் அழகில் என்னை தொலைக்கப் போகிறேன். இந்த மகிழ்ச்சி என்னை பதற்றம் கொள்ள செய்தது. மிக நீண்டு கிடந்த என் கனவுகளுக்கு இடையே, நிகழ்காலம் ஆமையாய் நகர்ந்தது. மீண்டும் அந்த உடைந்த ராஜகோபுரம், இந்த முறை எனக்கு அதன் வரலாறு தெரியும். உடைந்ததன் காரணம்  தெரியும். ஆங்கிலேயர் காலத்தில், அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் வருவதை தடுக்க, ராஜகோபுரம் தகர்க்கப் பட்டு அணை கட்டப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் அடித்தளம், இந்திய தொல்லியல் துறையால் சீர் செய்யப்பட்டுள்ளது.

அதை தாண்டி உள்ளே சென்று அந்த அழகிய சுதை நந்தியை பார்த்து வியந்து, அதன் அழகில் மயங்கி எத்துணை பெரிய நந்தி?அதன் ஆபரணங்கள் , மணிகள் எல்லாம் மிக அழகாய் செதுக்கப்பட்டிருந்தது .

உள்ளே மகா மண்டபம், நாயக்கர் கால திருப்பணி. ஒரே கல்லால் ஆன, ராஜேந்திரனின் கங்கை வெற்றியை குறிக்கும் நவக்கிரக சிலை. ஒரே ஒரு சிலையாய்  மட்டுமா கொண்டு வந்தான் ராஜேந்திரன்? தெரிந்துக்கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்துத் விட்டு, எனக்கு விமானத்தின் அழகை காண அழைத்து செல்ல போகிறவருக்காக நான் காத்திருந்தேன். கட்டிடக் கலை நிபுணர் அல்லவா, அதனால் ஆர்வம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. அந்த நிமிடமும் வந்தது. மகாமண்டபத்தின், ஓரத்தில் சுவற்றில் ஒரு சிறிய வரிசை படிக்கட்டுகள். இரண்டு அடிக்குள்ளாகவே அதன் நீளம் இருக்கும். அதில் ஏறி சென்றார், எனக்கு உயரம் என்றால் மிகவும் பயம், ஆனால் ஆசை யாரை விட்டது? ராஜேந்திரன்! விமானம்! பார்த்தே ஆக வேண்டும். அதிக பயத்தோடு, கூடவே ஆசையும் கொண்டு ஏறினேன். இப்போது இருப்பதுபோல் பத்து அடி இல்லை, ஒரு தளம். இருப்பது அடிக்கும் மேல் இருந்தது. அம்மாவும், அப்பாவும் கூட. முதல் தளம் சென்றதும், அருகில் இருப்பவர் கூட தெரியாத அளவிற்கு இருட்டு.



இறைவனின் லிங்க திருமேனிக்கு மேலே ஒரு சிறிய சதுர அளவிலான வெட்டு. மேல் இருந்து இறைவனின் லிங்கத்தை காண முடியும். வரைபபடங்களில், "ப்ளான்" என்று சொல்வார்கள், அதை போன்று இருந்தது. மிக சிலிர்பாய். ராஜேந்திரன் இப்படி நிச்சயம்  பார்த்திருப்பான். இங்கு, இதை போலவே குனிந்து.

அங்கு இருந்த சுவர்களின் அகலம் ஒரு மீட்டருக்கும் மேல். இரண்டு சுவர்கள் இருந்தது. இரண்டும் இணைந்து விமானத்தை தாங்கின. அதை போலவே மீண்டும் ஒரு முறை படிகள் ஏறி , அடுத்த தளத்தை அடைந்தோம். அங்கு தான் நான் காண நினைத்தது இருந்தது. ஆம், விமானத்தின் உட்கூடு. நிச்சயம் அருகில் இருப்பவரை கூட காண முடியவில்லை. எண்கோணத்தின் வடிவில் ஆரம்பித்து, வட்டமாய் முடிந்தது அந்த விமானம்.அதன் அழகையும் சிறப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. மேலும் அதன் கட்டுமானம் பற்றிி அறிந்து கொள்ள நினைத்தேன். எப்படி இது சாத்தியம்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்? இன்றைய சீரிய அறிவியல் கட்டுமான சாதனங்களால் கூட இப்படி ஒன்றை கட்ட முடியுமா என்று தெரியவில்லை. பார்த்து விட்டு, கீழ் இறங்க மனமும் வரவில்லை, பயமும் குறையவில்லை. பக்க சுவர்களை பிடித்துக்கொண்டு மிக மெதுவாய் இறங்க துவங்கினேன். அடுத்து சாந்தார அறை, அரச குடும்பங்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காய் . அதன் சுவர்களில், தஞ்சையில் உள்ளது போன்று ஓவியங்கள் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் இல்லை. ஆனால் மிக அழகிய கட்டுமானம். எல்லா சந்நிதிகளையும் பார்த்து விட்டு, அடுத்து அருங்காட்சியம் சென்றோம். முழுக்க சோழர்களின் கலையும் , ராஜேந்திரனின் பெருமையும் பற்றியது.

அடுத்து என் தேடல், தொல்லியல் துறையின் கீழ் அகழ்வு செய்யப்பட்டு இருக்கும், சோழர்களின் அரண்மனை. நீண்ட தேடல்களுக்கு பிறகு, அதையும் கண்டு பிடித்தேன். ஒரு வயல் காட்டின் நடுவே, ஒரு அடித் தளம் இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சில சிற்பங்களை ஒரு சிறிய மேடையில் வைத்திருந்தனர். விபரங்கள் ஏதும் தெரியவில்லை. மிகுந்த நிறைவுடன் முடிந்தது என் இரண்டாம் பயணம்....






இதிலும் நான் சிலவற்றை பார்க்கவில்லை என்பது, சில வருடங்கள் கழித்து தெரிந்தது. அந்த பயணத்தை மிகுத்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அது செங்கமேடு என்னும் இடத்தில், ராஜேந்திரன் போரில் வென்று கொண்டு வந்த சிற்பங்களுக்காக ........ 

No comments:

Post a Comment