நடந்து கொண்டிருந்த கோவிலின் கட்டிட வேலையை,
பார்வையிட, அரசரே வந்திருக்கிறார் என்றதும் எங்கும் பயமும், மகிழ்ச்சியும்
பரவி இருந்தது. தச்சு வேலை செய்யும் இடத்தில் நின்ற மன்னர், ஒரு அழகிய மர சட்டத்தை
கையில் எடுத்தார்.
கோவிலின் தலைமை கட்டிட வல்லுனரை அழைத்து , இதைபோன்று சுட்ட
கல்லில் செய்ய முடியுமா? என்று கேட்டார். தலைமை கட்டிட வல்லுனருக்கு மிக சங்கடமாக
இருந்தது. அது ஒரு அழகிய மர துண்டு. கீழே நீண்ட செவ்வகமாகவும் மேலே மலர்ந்த
நிலையில் பூவின் இதழ்கள் இருப்பதை போலவும் இருந்தது. முயன்று பார்கிறேன் மன்னா
என்று சொல்லிவிட்டு சென்றார். மன்னருக்கு அப்படி ஒரு துண்டு, ராஜ கோபுரம் முழுக்க
வந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் வந்து விட்டது. தலைமை கட்டிட வல்லுநர்,
எப்போதும் செங்கல் செய்து தரும் குயவன் இல்லத்திற்கு சென்றார். அந்த மர துண்டை
காண்பித்து, இப்படி மண்ணில் செய்ய முடியுமா என்று வினவுகிறார்.
குயவன் அயர்ந்து
போகிறான். ஐயா, இப்படி எல்லாம் மண்ணில் எப்படி ஐயா செய்ய முடியும்? உங்களுக்கு தெரியாதுங்களா ? என்று வல்லுனரை
பார்க்கிறான். அவ்வளவுதான், வல்லுனருக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தகர்ந்தது.
சரி, கோவில் பக்கம் சில நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று எண்ணி, குயவனோடு அவன்
செய்யும் வேலையில் சிறிது நாட்கள் பங்கேற்றார். அவன் மண்ணை எடுத்து பிசைந்து ,
தண்ணீர் விட்டு, மிதித்து, குழைத்து, காய விட்டு, மீண்டும் பிசைந்து, அதை செங்கல்
சட்டத்தின் இடையில் அடைத்து காய விட்டு வெயிலில் சிறிது நாட்கள் வைத்து சூளையில்
இட்டு சுட்டு எடுத்தான்.
இதை எல்லாம் வல்லுநர் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர்
மனதில் எதோ ஒரு எண்ணம் தோன்றி விட்டது. குயவன் வீட்டின் பக்கத்தில் ஒரு குடில்
அமைத்துக்கொண்டார். அவருடைய வரைக்கலை பொருட்கள், மேசை, எல்லாம் ஒரே நாளில் வந்து சேர்ந்தது.
அந்த மர துண்டின் வடிவத்தை வேறு வேறு கோணத்தில் வரைந்துகொண்டார். அதன் கட்டமைப்பை
புரிந்து கொள்ள அது உதவும் என்று எண்ணினார். அதை துண்டுகளாகி மீண்டும்
இணைத்துப்பார்த்தார் . சரியாக வந்தது. இப்போது இதை மண்ணில் செய்ய என்ன செய்ய
வேண்டும் என்று யோசித்தார். குயவனை கேட்டு மண் எவ்வளவு சுருங்கும் என்று
கேட்டுக்கொண்டார். அதையும் கணக்கில் கொண்டு, அதை விட பெரிதாய் அந்த சட்டம்
செய்யப்பட வேண்டும். மன்னன் எந்த துண்டை, செங்கலில் செய்ய சொன்னாரோ அதன் மாதரியை
அந்த அளவில் வரைந்தார். எத்துணை வேறு வேறு சட்டங்கள் செய்ய வேண்டும் என்று
முடிவிற்கு வந்துவிட்டார்.
எல்லா சட்டத்தின் அளவுகளும் சொல்லி, வடிவங்கள் வரைந்து
கொடுக்க ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டார். அவரிடம் எல்லாவற்றையும் விளக்கி படங்களை
வரைய சொன்னார். வரைந்த படங்களின் சட்டங்களை செய்ய ஒரு தச்சரை வரவழைத்தார் .
அவருக்கு ஆதிமுதல் அந்தம் வரை எல்லாம் சொல்லி , ஒவ்வொரு சட்டமும் இருக்க வேண்டிய
அளவும், அதன் தேவையும், அது பொருந்த வேண்டிய அடுத்த பாகத்தின் அவசியத்தையும்
சொன்னார். இது அவர்கள் எப்போதும் செய்வது போல இல்லாமல், வேறுபட்டு இருப்பது
அவருக்கு கொஞ்சம் குழப்பம் தந்தாலும், மன்னர் சொல்லிவிட்டார் என்ற வார்த்தை,
அவரின் தயக்கத்தை போக்கியது. அந்த படங்களின் மாதிரிகளை பெற்றுக்கொண்டு, அவருடைய உதவியாளர்களுக்கு
விளக்கி வேலையை செய்ய ஆரம்பித்தார். பல மணி நேர உழைப்பிற்கு பிறகு, அத்தனை சட்டங்களும் தயாராகி விட்டது.
அடுத்தநாள் காலையில் சட்டங்கள் அனைத்தும் கட்டிட வல்லுநர் கையில் சேர்ந்தது.
அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இதற்கு பிறகான வேலையை எண்ணினால்,
அவருக்கு உறக்கம் வரவில்லை. இதற்கிடையில் குயவன் செங்கல் செய்வதற்கான களிமண்ணை
தயார் செய்து வைத்திருந்தார்.
அடுத்தநாள் காலை, அந்த கனவின் சோதனைக்கான நேரம்
வந்தது. சட்டத்தின் உள்ளே களிமண்ணை நிரப்பி, சிறிது காய விட்டு வெயிலில் காய
வைத்தார்கள். சில நாட்கள் அப்படியே காய்ந்தது. பிறகு சுளை போட குயவன் ஆயத்தம்
செய்தான். யாருக்கும் இருப்பு கொள்ளவில்லை. அவர்களின் இறுதி கட்ட முயற்சி, இது
பலிதம் அகுமா , இல்லையா என்பதை தீர்மானிக்க போகும் கடைநிலை செயல். எல்லாம் அடுக்கி
சுளை போட்டகிவிட்டது. ஒரு வழியாக, எரிந்து முடிந்து தயாராகி விட்ட செங்கற்களை
சூளையில் இருந்து எடுத்து வந்தார்கள். கொஞ்சம் சுண்ணாம்பு பூச்சு கலவை, கலவை
அள்ளும் கருவிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்தது. கலவை சேர்க்காமல், செங்கற்களை
ஒன்றின்மீது ஒன்றாய் அடுக்கி வைத்து அவர்கள் எண்ணிய வடிவம் வருகிறதா என்று
சோதித்து பார்த்தார்கள். அத்துணை கண்களிலும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருங்கே
இருந்தது. அவர்களின் மன்னனின் கனவை சுமக்கும் கண்கள் அவை. அதன் வடிவம் வளர வளர
அவர்களின் கண்களின் ஓரம் நம்பிக்கையும் சிறிது கர்வமும் கலந்துக் கொண்டது.
அவர்களின் இத்துணை நாள் முயற்சிக்கு பலன் கிடைத்து. மீண்டும் கலவை கொண்டு அந்த
வடிவத்தின் செங்கற்களுக்கு இடையில் பூசி
இணைத்தார்கள். அரசருக்கு செய்தி சொல்லி ஆள் அனுப்பிற்று. அதற்கு மேல் செயல்கள்
வேகமாக நடந்தது. தன கனவை , கண்களில் கொண்டு அதற்காய் உழைத்த அத்துணை உயிர்களையும்
பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தார் மன்னர். பிறகென்ன, நம் கட்டிட வல்லுனர் அந்த
பகுதியை ராஜ கோபுர அமைப்பின் வடிவத்தில் கொண்டு வந்துவிட்டார்.
இது என் கற்பனைதான், பழையாறையில் நின்று அதன்
சிதைந்து போன ராஜ கோபுரத்தை காணும் போது அதன் மேல் இருந்த ஒரு வடிவம் எப்படி
செய்யப்பட்டிருக்கும் என்ற எண்ணம் அதிகமாய் வந்தது. இப்படியும் இருக்கலாம் .... இப்போது
நம் கட்டிட துறை மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால்
நம்மிலும் அதிகமாய் நம் முன்னோர்கள் செய்திருகிறார்கள் . எப்படி, ஏன் , யார் என்ற
கேள்வி எப்போது வருகிறதோ, அப்போது நம்மை பற்றிய தேடல் இன்னும் நீண்டு கொண்டே
போகும். நிறைய அறிந்து கொள்ளவும் முடியும். கர்வமும், திமிரும் சேர்ந்து அடுத்த
தலைமுறைக்கு பெருமிதத்தோடு இதை சொல்ல நமக்கு தைரியமும் வரும் ........

Arumai
ReplyDelete